நமது நாடு மற்றும் தமிழகத்தின் அடிப்படையை சொல்லும் வகையில் மாணவர்களின் கல்வி அமைய வேண்டும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநில கல்வி கொள்கையின் அடுத்தகட்ட நகர்வுக்கான உயிர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும், மாணவர்களின் திறமைகளை எப்படி வெளிகொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
விருந்தோம்பல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்டவற்றை பாடத்திட்டத்தில் கதைபோல் கொண்டு செல்வது குறித்தும் பேசப்பட்டதாகக் கூறினார்.
மேலும், பெற்றோரை பாதுகாப்பது, ஆசிரியர்களை மதிப்பது, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை கொண்ட மாணவர்களை உருவாக்குவதே நமது நோக்கம் எனவும் நாராயணன் தெரிவித்தார்.
















