கரூர் சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாகத் தவெக பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐ அதிகாரிகள் 3 குழுக்களாகப் பிரிந்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த வணிக நிறுவன உரிமையாளர்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் அனுப்பிய சம்மன் அடிப்படையில் தவெகவைச் சேர்ந்த 5 நிர்வாகிகள் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.
விசாரணை இன்னும் முடிவடையாதலால், கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
















