உலகின் நம்பர் ஒன் மகிழ்ச்சியான நாடாகப் பின்லாந்து திகழ்ந்து வரும் போதிலும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் தவித்து வருகிறது. ஏன் இந்த நிலைமை? எதனால் ஏற்பட்டது என்பதுபற்றிப் பார்க்கலாம்.
உலக மக்கள்தொகை தரவரிசையில் 118வது இடத்தில் உள்ள பின்லாந்தில் சுமார் 5.6 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ள பின்லாந்து, உலகளாவிய கல்வி தரவரிசையிலும் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.
கார்பன் நடுநிலைமையிலும் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பின்லாந்து வாங்கும் திறன் குறியீடு மற்றும் வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் 16வது இடத்தில் உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியனுக்குப் போர் இழப்பீடுகளைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பின்லாந்து, மிகவும் கடுமையான பொருளாதார சிக்கலில் இருந்தது. இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த நிலையில் மீண்டும் 1991ம் ஆண்டு மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்த பின்லாந்து மீண்டும் 2008ம் ஆண்டு வீழ்ச்சியடைந்தது. அதன் பிறகுதொடர்ச்சியாகப் பொருளாதாரர நெருக்கடியில் சிக்கியுள்ள பின்லாந்தில் 2009ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பற்றாக்குறை கூடிவருகிறது. 2014ம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்தின் வீழ்ச்சியால், பின்லாந்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்தது.
உக்ரைன் போரால் ரஷ்யா மீதான தடைகள் பின்லாந்தின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறையைப் பெரிதும் பாதித்தது. கடந்த ஆண்டு, நாட்டின் பொது அரசுக் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 80 சதவீதத்தைத் தொட்டது. 2027ம் ஆண்டில் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 87% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியனின் மிக உயர்ந்தஅளவாகப் பின்லாந்தில் வேலையில்லா திண்டாட்டம் 10 சதவீதமாக உள்ளது. இதில், 15 முதல் 24 வயதானவர்களிடையே 21.2 சதவீதமாகவும் உள்ளது.
இனி எப்போதும்வேலை இல்லாமல் போகுமோ என்ற அச்சத்தில் தான் பின்லாந்து இளைஞர்கள் உள்ளனர். இதற்கிடையே, 33 வயதான ( Juho-Pekka Palomaa) ஜூஹோ-பெக்கா பலோமா, தனது 1,000 நாள் வேலையின்மையை “உங்களுக்குச் சொந்தமாக உணவு கொண்டு வாருங்கள்” என்ற போராட்டத்துடன் கொண்டாடியுள்ளார். முன்னாள் வீடியோ தயாரிப்பாளரான இவர் ஏராளமான விண்ணப்பங்களை அனுப்பியும் 10க்கும் மேற்பட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்றும் இன்னமும் வேலை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள வலதுசாரி கூட்டணி அரசு, பொது நிதியை வலுப்படுத்தவும், அதிகரித்து வரும் கடனை கட்டுக்குள் கொண்டுவரவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2025ம் ஆண்டுக்குள் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் சமூக நலன் குறைப்புக்கள் திட்டமிடப்பட்டுள்ளதால், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே பலவீனமான நாட்டின் பொருளாதாரத்துக்கு இது இன்னும் அதிகஅழுத்தத்தைச் சேர்க்கும் என்றும் கூறியுள்ளனர். ஆடம்பரமில்லாத ஒழுக்கமான இன்பங்களுடன், ஒரு ஒழுக்கமான வாழ்க்கையை வாழும் பண்பு பின்லாந்து மக்களிடம் உள்ளது.
உலக மகிழ்ச்சி அறிக்கையின் நிறுவன ஆசிரியரான John Helliwell பேராசிரியர் ஜான் ஹெல்லிவெல் பொருளாதாரத்தைவிடக் கஷ்டமான காலங்களில் செயல்படும் திறனைப் பொறுத்தே மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறியுள்ளார். அதனால் தான் உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
















