மும்பை தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பயங்கரவாத தாக்குதலில் 170 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், மும்பை தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மும்பையில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாநில அமைச்சர்கள், மகாராஷ்டிரா டிஜிபி ரஷ்மி சுக்லா மற்றும் மும்பை காவல் ஆணையர் தேவன் பாரதி உள்ளிட்டோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மும்பை தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வீரர்களின் தியாகத்தைத் தேசம் நன்றியுடன் நினைவுக்கூர்கிறது என்றும், அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், வலுவான மற்றும் வளமான பாரதத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் ஒன்றாக முன்னேறுவோம் எனத் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
















