சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்குப் பாயசம், அப்பளத்துடன் கூடிய மதிய உணவு வழங்கப்படும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது.
முதல் நாளில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமி ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
இதனிடையே கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானத்தில் வழங்கப்பட்டு வந்த வழக்கமான புலாவ், சாம்பார் சாதத்திற்கு பதிலாகப் பாயசம், அப்பளம், காய்கறிகளுடன் கூடிய முழுமையான ‘கேரள சத்யா’ உணவு வழங்கப்படும் எனவும் இத்திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
இதனிடையே சபரிமலையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 10ம் தேதிவரை நிறைவடைந்துள்ளதாகவும் பக்தர்களின் வருகையைப் பொறுத்து ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
















