குளித்தலை அருகே தனியார் வங்கி மேலாளரை மிரட்டிப் பணம் பறித்த சம்பவத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலையம் அருகே தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்தாண்டு வீரவல்லியை சேர்ந்த மணிவர்ஷா என்ற பெண் 45 சவரன் நகையை அடமானம் வைத்துள்ளார்.
நகையை மீட்க சென்றபோது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக வங்கி பணியாளர்கள் மற்றும் மணிவர்ஷா இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த திமுக நிர்வாகி பிச்சைமுத்து என்பவர் வங்கி மேலாளர் சிவாவை அணுகியுள்ளார்.
மேலும், பிரச்னையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி வங்கி மேலாளரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து, வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி பிச்சைமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
















