அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாகத் தேர்வானார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக அமைப்பு செயலாளராகச் செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்த செங்கோட்டையன் கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வந்த செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்திற்கு வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன், நாளை தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















