கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இடையே வெடித்த அதிகார மோதலால், காங்கிரஸ் கட்சி தலையை பிய்த்துக் கொண்டு முழிக்கிறது. முதல்வர் பதவியைச் சித்தராமையா தக்க வைப்பாரா ? அல்லது டி.கே.சிவக்குமாரிடம் பறிகொடுப்பாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சொற்ப மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், முதலமைச்சர் சித்தராமையா – துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இடையே வெடித்திருக்கும் அதிகார மோதல், ஆட்சி கட்டிலுக்கு வேட்டு வைத்து விடுமோ ? என்ற அச்சத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் 2023-ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதலமைச்சராக யாரை நியமிப்பது என அப்போதே தட்டு தடுமாறியது.
சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அயராது உழைத்த கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரையா? அல்லது மூத்த தலைவரும், பல முறை முதல்வராக பதவி வகித்தவருமான சித்தராமையாவையா? என்ற குழப்பம் நீடித்தது. இறுதியில், சித்தராமையா முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. விழாவில் சித்தராமையா பதவிப்பிரமாணம் வாசித்தபோது கூட வராத சத்தம், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றபோது அரங்கமே அதிர்ந்தது.
முதலமைச்சர் தேர்வில் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று காங்கிரஸ் தலைமை நினைக்கும் அளவுக்கு அந்தச் சம்பவம் அரங்கேறியது. எனினும் அரசியல் சாணக்கியத்தால் ஆட்சி அமைத்து விட்டோம் என நினைத்திருந்த காங்கிரஸ் தலைமைக்கு, டி.கே.சிவக்குமாரின் அரசியல் நகர்வு குடைச்சலை கொடுத்திருக்கிறது. கடந்த 20-ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், முதல்வர் பதவி டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது சொந்த தொகுதியான கனக்பூராவில் பேட்டியளித்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் பதவி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், கட்சியை பலவீனப்படுத்திவிடும் என்பதால், மேற்கூட்டி எதுவும் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், சித்தராமையாவோ முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அடம்பிடிப்பதாகவே தெரிகிறது.
முதல்வர் பொறுப்பில் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் பெறவே, டி.கே.சிவக்குமார் தரப்பு விரும்புவதாகவும், ராகுல் காந்தி குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் டி.கே சிவக்குமார் உள்ளடி வேலைகள் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இருதரப்புமே தங்கள் தலைவருக்கே முதல்வர் பதவி வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியிருக்க, கடந்த ஒரு வாரக் காலமாக என்ன செய்வதன்று தெரியாமல் காங்கிரஸ் தலைமை விழி பிதுங்கி நிற்கிறது. கர்நாடகா அரசியல் பிரச்னைக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியுடனும், ராகுல் காந்தியுடனும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் கார்கே கூறியிருக்கிறார்.
முதல்வர் பதவி மீதான ஆசையை டி.கே.சிவக்குமார் நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும், அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் காங்கிரஸுக்கு, டி.கே.சிவக்குமார் – சித்தராமையா இடையேயான மோதல் கட்சியை இன்னும் பலவீனப்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
















