பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஏழாயிரத்து 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரிய வகை காந்த உற்பத்தி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், அரிய வகை கனிமங்களை பயன்படுத்தி தயார் செய்யப்படும் காந்தம் உள்ளிட்டவை மின்சார வாகனங்கள், விமானங்கள், மின் சாதனங்கள், மருத்துவ மற்றும் பாதுகாப்பு சார்ந்த கருவிகளில் பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
ஏல முறை மூலம் 5 நிறுவனங்களுக்கு இந்த ஒப்பந்தம் ஒதுக்கப்படும் என்றும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஆண்டுதோறும் 1,200 மெட்ரிக் டன் காந்த உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அரிய வகை கனிமங்களுக்காக சீனாவை நம்பியிருக்கும் நிலையை உருவாக்காமல், இந்தியா தன்னிறைவு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















