பெங்களுரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் கைதிகள் மது தயாரிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள பயங்கரவாதி ஷகீல் மன்னா, பாலியல் வன்கொடுமை குற்றவாளி உமேஷ் ஷெட்டி உள்ளிட்ட கைதிகள் செல்போன் பயன்படுத்திய வீடியோ கடந்த 7ம் தேதி வெளியாகிச் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு மறுநாள் சிறைக்குள் மது அருந்திவிட்டு கைதிகள் ஆட்டம் போடும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மாநிலத்தில் உள்ள சிறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள்குறித்து சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
சிறைக்குள் மது எப்படி சென்றது என்பது குறித்து இந்தக் குழுவினர் விசாரித்தனர். சிறைக்குள் சென்று கைதிகளின் அறைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது சிறையிலேயே கைதிகள் மது தயாரித்ததை கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
மது தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை சிறை ஊழியர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளதாகவும், சில பொருட்கள் சிறைக்குள் இருக்கும் பேக்கரியில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைதிகளில் யாருக்காவது பிறந்தநாள் என்றால், மது விருந்து வைத்து கொண்டாடுவதையும் இந்த குழுவினர் கண்டுபிடித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
















