இத்தாலியில் உயிரிழந்த தாயின் ஓய்வூதியத்தை பெற அவ்வை சண்முகி கமலஹாசன் போல் பல ஆண்டுகளாகப் பெண் போல் மாறுவேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோவை சேர்ந்த கிராசியெல்லா டால் ஓக்லியோ என்பவர் செவிலியராகப் பணியாற்றினார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் காலமானார். ஆண்டுக்கு 83 லட்சம் ரூபாய் வரை வரும் அவருடைய ஓய்வூதியத்தை விட்டுத் தர மனமில்லாத அவருடைய 56 வயது மகன், மோசடி செய்யத் துணிந்தார்.
இந்நிலையில் ஓய்வூதிய அடையாள அட்டை காலாவதியானதால் புதுப்பிக்க வரும்படி நகராட்சி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. இதற்காக லிப்ஸ்டிக், பழங்கால காதணிகள், விக் அணிந்து, தாயைப் போலவே வேடமிட்டு அந்த நபர் சென்றுள்ளார்.
ஆவணத்தில் உள்ள படத்தை ஒப்பிட்டுப் பார்த்த அதிகாரிகளுக்கு முதலில் சந்தேகம் ஏற்படாத நிலையில் அவர் நடந்து கொண்ட விதம், சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓய்வூதியத்திற்காக மாறுவேடமிட்டு வந்ததை ஒப்புக் கொண்டார்.
தாயின் இறப்பை மறைக்க, உடலை ‘மம்மி’ போன்று பதப்படுத்தி வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்ததால் வீட்டின் துணி அலமாரியில் மறைத்து வைத்திருந்த தாயின் உடலை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















