ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அரசியலமைப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு, அதுகுறித்து ஆலோசிக்கத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் மத்திய அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாகச் சட்ட நிபுணர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல்களை நடத்தும் முழு அதிகாரம் படைத்த தலைமை தேர்தல் ஆணையருடன் ஆலோசிக்க நாடாளுமன்ற கூட்டு குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 4-ம் தேதி ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஆலோசனையின் முடிவில், ஒரே நாடு; ஒரே தேர்தல் விஷயத்தில், தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
















