பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் கனமழை காரணமாகச் சாக்கடை நீரால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக முன்னாள் மேயர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து மார்க்கெட் வளாகத்தில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகியும், முன்னாள் மேயருமான புவனேஸ்வரி என்பவர் காந்தி மார்க்கெட்டை பார்வையிட்டு வியாபாரிகளிடம் நிலைமை கேட்டறிந்தார்.
மாநகராட்சி நிர்வாகத்தின் சீரற்ற வடிகால் மேலாண்மை மற்றும் பராமரிப்பு இல்லாமையே இந்த அவல நிலைக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
மார்க்கெட் பகுதியில் உள்ள வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்பதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், மார்க்கெட் பகுதியில் உள்ள வடிகால்களை உடனடியாகத் தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், மார்க்கெட் பகுதியில் முன்னாள் மேயர் ஆய்வு மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















