ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 14 பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. ஹாங்காங் மக்களை உலுக்கிய இந்தக் கோர சம்பவம்குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.
ஹாங்காங்கில் உள்ள தைப்போ மாவட்டத்தில் அமைந்திருக்கும் உயரமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தான் இப்படிப்பட்ட பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. வளாகத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, ஏழு கட்டங்களுக்கும் பரவியதால் நிலைமை கைமீறிப்போனது.
மொத்தம் 2000 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முதலில் 4 பேர் பலியானதாகக் கூறப்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களை காப்பாற்ற முடியாமல் போனதால் பலி எண்ணிக்கை 10 -ஐ தாண்டியது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தீ மிகவும் வேகமாகப் பரவுவதற்கு கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் சாரங்கள் மற்றும் கட்டுமான வலைகள் காரணமாகக் கூறப்படுகிறது. இவை ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு தீ மிக வேகமாகப் பரவ வழிவகுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தை, பொழுது விடிந்தும் அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறிணர். அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டனர்.
ஹாங்காங்கின் தை போ மாவட்டத்தில், மக்கள் தொகை அதிகம் என்பதால், அங்குத் தனித்தனியே வீடுகளை கட்டுவது கடினம். அதன் காரணமாகவே, அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் திரும்பும் திசையெல்லாம் நெருக்கடியாகக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், அவை பாதுகாப்பான முறையில் கட்டப்படுகின்றனவா? என்பது குறித்து ஹாங்காங் மக்கள் தற்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
















