வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. தஞ்சை மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிக் கடல்போல் காட்சியளிப்பதற்கு வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் வேப்பந்தாங்குடி பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால், 45 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டூர் பகுதி விவசாயிகளும் மழையின் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பதால் செய்வதறியாது விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கால்வாய் தூர்வாரும் பணி பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், விவசாயத்தை விட்டே சென்று விடலாம் என்ற எண்ணம் தோன்றுவதகாவும் திருவாரூர் மாவட்டத்தின் கள்ளிக்குடி பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கலப்பால் பகுதியிலும் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதால், தமிழக அரசு விவசாயிகளின் வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு உடனடியாக ஏக்கருக்கு 50,000 ரூபாய் நிவாரணமாக அறிவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாய அணி மாநில துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு அறிவித்த எந்த நிவாரணத் தொகையும் அவர்கள் கைக்கு வந்த சேராத நிலையில், இந்த ஆண்டாவது தமிழக அரசுச் செவி சாய்க்குமா? என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
















