கர்நாடகாவில் பைக் டாக்சிகள் சட்டவிரோதமானவையென மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பைக் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
பெங்களூருவில் பைக் டாக்சிகளில் செல்லும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் எதிரொலியாகப் பைக் டாக்சிக்கு தடை விதித்த மாநில அரசு, பின்னர் சில தளர்வுகளை மட்டும் வழங்கியது.
இதனிடையே பைக் டாக்சி இயக்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குமாறு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, போக்குவரத்து, சாலை பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 11 மூத்த அதிகாரிகள் கொண்ட உயர் அதிகார குழுவை அமைத்தது கர்நாடக அரசு.
இந்தக் குழு பிற மாநிலங்களில் பைக் டாக்சி சேவைக்குப் பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.
அந்த அறிக்கையில், இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாது. பைக் டாக்சிகளை அனுமதிப்பது மோட்டார் வாகன சட்டத்தை மீறும் செயல். பைக் டாக்சிகள் பாதுகாப்பற்றவை மற்றும் சட்டவிரோதமானவை.
எனவே அதற்கு அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவால் வேலை இல்லாமல் பைக் டாக்சி ஓட்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
















