ரயில்களில் NON-AC ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்குச் சுகாதாரமான படுக்கை விரிப்பு வழங்கப்படும் எனத் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஏசி அல்லாத ஸ்லீப்பர் வகுப்புப் பயணிகள், கட்டணம் செலுத்தி படுக்கை விரிப்புகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளின் வசதியை மேம்படுத்துதல், தேவைக்கேற்ப மலிவு விலையில் படுக்கை விரிப்புகளை வழங்குதல், இந்திய ரயில்வேக்கு கூடுதல் வருவாய் ஈட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னோடி திட்டத்தை சென்னை கோட்டம் நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் படுக்கை விரிப்புகளை கொள்முதல் செய்தல், இயந்திரம்மூலம் சுத்தம் செய்தல், பேக்கிங், ரயிலில் ஏற்றுதல், விநியோகம் மற்றும் சேமிப்பு ஆகிய அனைத்து பணிகளையும் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் நிர்வகிப்பார்.
முதற்கட்டமாகச் சென்னை கோட்டத்தால் பராமரிக்கப்படும் 10 ரயில்களில் மூன்று ஆண்டுகளுக்கு இச்சேவை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 28 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் உரிமக் கட்டணமாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
















