சேலத்தில் நிகழ்ந்த அன்னை தெரசா அறக்கட்டளை மோசடியில் அமைச்சர் மற்றும் மேயருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், அமைச்சர் தொகுதியில் ஒரு கிராமம் அத்திப்பட்டி போல் உள்ளது என எதிர்க்கட்சி கொறடா செல்வராஜ் பேசியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து கூட்டத்தை மேயர் ராமச்சந்திரன் அவசர அவசரமாக முடித்து வைத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து வெளிநடப்பு செய்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, அம்மாபேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை தெரசா அறக்கட்டளை மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மேயர் ராமச்சந்திரன் இருவரும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியதால் பொதுமக்கள் நம்பி முதலீடு செய்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த மோசடியில் அமைச்சருக்கும், மேயருக்கும் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
















