மோதல் வழக்கில் சேலம் நீதிமன்றத்திற்கு வந்த திமுக கவுன்சிலர்கள், திடீரென விசாரணைக்கு ஆஜராகாமல் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சேலம் மாநகராட்சி கூட்ட அரங்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகத் திமுக கவுன்சிலர்கள் பச்சையம்மாள், ஈசன் இளங்கோ ஆகியோருக்கு சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அவர்கள் விசாரணைக்கு ஆஜராக வந்தனர்.
அப்போது மாநகராட்சி இயல்புக் கூட்டம் நடைபெற உள்ளதால் விசாரணைக்கு ஆஜராக வேண்டாமென அவர்களுக்குத் தலைமையில் இருந்து உத்தரவு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் திமுக கவுன்சிலர்கள் அங்கிருந்து சென்ற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
















