இன்டர்நெட் நெட் இல்லாமல், டேட்டா கார்டில் பணம் இல்லாமல், ஸ்மார்ட்போனில் ஆன்லைனில் வீடியோ, நேரலையில் நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ், திரைப்படங்கள், மற்றும் டிவி பார்க்கும் வசதி அறிமுகமாகி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒவ்வொரு நாளும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், லட்சக் கணக்கான மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரலையில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செய்திகளைப் பார்க்கிறார்கள். ஸ்மார்ட் போனில் இப்படி டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்க மொபைல் டேட்டா மற்றும் WiFiயை நம்பியிருக்கிறார்கள்.
இந்தியாவில் 80 கோடி ஸ்மார்ட்போன்கள் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்துவோரில் 69 சதவீதம் பேர் வீடியோக்களை பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. மொபைல் டேட்டா மற்றும் WiFi தேவையில்லாமல், ஸ்மார்ட் போனில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களைப் பார்க்கும் புதிய தொழில்நுட்பம்குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் டைரக்ட் டூ மொபைல் D2M தொழில்நுட்பம் குறிப்பிடத் தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள இந்தத் தொழில்நுட்பத்தின் சோதனைகள் கடந்த ஆண்டு பெங்களூரு, கர்தவ்ய பாதை மற்றும் நொய்டாவில் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி மற்றும் பெங்களூருவில் இந்தத் தொழில்நுட்பத்தின் சோதனைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட இரண்டு டஜன் நகரங்களில் கூடுதல் சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு, இந்தத் தொழில்நுட்பம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்தியா முழுவதும் D2M நெட்வொர்க்கை நிறுவச் சுமார் 8,000 கோடி ரூபாய் செலவாகும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். டைரக்ட் டூ மொபைல் D2M தொழில்நுட்பம் மூலம் டிவி வீடியோ, ஆடியோ குறுஞ்செய்திகள் ஆகியவை செயற்கைக்கோளிலிருந்து காற்றின் மூலம் நேரடியாக ஸ்மார்ட் போனுக்கு வரும். இதற்கு இன்டர்நெட் அல்லது WiFi யை மொபைலில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்காது.
அதனால் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒருவர் மொபைல் டேட்டாவை ரீசார்ஜ் செய்யவேண்டிய அவசியம் இருக்காது. 2022 ஆம் ஆண்டில் ஐஐடி கான்பூரில் ‘D2M Broadcast 5G Broadband Convergence Roadmap for India’ என்ற தலைப்பில் D2M பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதன் வன்பொருள் தேவைகளுக்காக எஸ்எல் 3000 என்ற பிரத்யேக சிப்-யை டாடாவின் Saankhya Labs வடிவமைத்துள்ளது.
இந்தச் சிப் மூலமே ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் டேட்டா காற்றின் அலைகள் மூலம் அனைத்து செய்திகள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க முடியும். டிடிஎச் (DTH) எனப்படும் டைரக்ட் டூ ஹோம் (Direct To Home) சேவையைப் போல டைரக்ட்-டு-மொபைல் (D2M) சேவை செயல்படுகிறது. டி2எம் (D2M) மூலம் இன்டர்நெட் வசதி இல்லாத தொலைதூர கிராமங்களிலும் மலைப் பகுதிகளிலும் கூட OTT -யில் வீடியோக்களைப் பார்க்க உதவுகிறது.
அரசின் முக்கிய செய்திகள், பொது அறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கைகளையும் இதன் மூலம் நாடு முழுவதும் நேரலையில் அனுப்ப முடியும். சொல்லப் போனால், இந்தத் தொழில்நுட்பம், ஒளிபரப்பு சிக்னல்களைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போனை ஒரு டிவியாக மாற்றுகிறது. D2M சேவை அரசின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்தபிறகு D2M தொழில்நுட்பத்தை support செய்யும் புதிய 2,000 முதல் 2,500 ரூபாய் வரை விலை கொண்ட சாதனத்தைத் தயாரிப்பதில் லாவா மற்றும் HMD ஆகிய இரு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
விரைவில் அனைத்து ஸ்மார்ட் தயாரிப்பு நிறுவனங்களும் தாங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட் போன்களில் DTH செட்டப் பாக்ஸ் போல, D2M ஆண்டெனா உள்ளிட்ட செட் அப் பாக்ஸை வழங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் நாட்டின் எந்த மூலையிலும் அமர்ந்து எந்த வீடியோவையும் செயற்கைக்கோள் உதவியுடன் பார்க்கலாம். இன்டர்நெட் டேட்டா மூலம் அதிக வருவாய் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் இனி பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
















