வங்கக் கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டதாலும் மழைநீர் தேங்கியதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியாக ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடல்பகுதிகளில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன.
மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் கடலோரம் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.
மேலும் ஆக்ரோஷமான அலைகள் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினர்.
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம், நடராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்ததோடு, மழைநீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
















