ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் அவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏ-320 வகை விமானங்களை மறுஅறிவிப்பு வரும் வரை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்ன நடந்தது? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நெதர்லாந்தில் உள்ள ஏர்பஸ் நிறுவனம், வணிக மற்றும் ராணுவ விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஏ-320 வகையைச் சேர்ந்த விமானங்கள் பயணிகள் போக்குவரத்துக்கு புகழ்பெற்றவையாக உள்ளன. 8,700 கிலோமீட்டர் வரை இயங்கும் தன்மை கொண்ட இந்த விமானங்களில் 120 முதல் 244 பேர் வரை அமர்ந்து பயணம் செய்ய முடியும்.
இதன் காரணமாகப் பல்வேறு நாடுகள் இந்த விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. இன்றைய தேதிக்கு உலகம் முழுவதும் 12 ஆயிரத்து 260 ஏ-320 வகை விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜெட் ப்ளூ என்ற விமான போக்குவரத்து நிறுவனம், கடந்த அக்டோபர் 30ம் தேதி ஏ-320 விமானத்தை வழக்கம்போல் இயக்கியது.
அப்போது திடீரென நடுவானில் அந்த விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்தது. உடனடியாக விமானிகள் அதனை புளோரிடாவில் உள்ள டம்பா என்ற பகுதியில் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், விமானத்தில் பயணித்த சுமார் 20 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து விமானம் ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டது.
ஆய்வின் முடிவில் விமானத்தில் உள்ள ELAC எனப்படும் Elevator Aileron Computer அமைப்பில் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானிகள் அளிக்கும் கட்டளைகளைச் சமிக்ஞைகளாக மாற்றிப் பிற பகுதிகளுக்கு அனுப்பும் பணியை இந்த ELAC அமைப்பு செய்கிறது. அது தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட ஒரு விமானத்தில் மட்டுமல்லாது ஏ-320 வகையை சேர்ந்த பெரும்பாலான ஏர்பஸ் விமானங்களில் இந்தப் பிரச்னை உள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அனைத்து விமானங்களிலும் சாஃப்ட்வேரை அப்டேட் செய்ய வேண்டும் என ஏர்பஸ் நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான உத்தரவு வெளியானதை அடுத்து உலகம் முழுவதும் ஏர்பஸ் விமான சேவை ஸ்தம்பித்தது. அனைத்து பகுதிகளிலும் ஏ-320 விமானங்கள் அடுத்தடுத்து தரையிறக்கப்பட்டன. சுமார் 6 ஆயிரம் விமானங்களில் சாஃப்ட்வேர் அப்டேட் அல்லது ஹாட்வேர் ரீ-அலைன்மெண்ட் செய்யும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவில், இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் 200 மேற்பட்ட ஏ-320 வகை விமானங்களை இயக்கி வருகின்றன.
அவை எவற்றையும் மறுஉத்தரவு வரும் வரை இயக்க வேண்டாம் என இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏ 318, ஏ319, ஏ321/5 வகைகளை சேர்ந்த விமானங்களின் இயக்கத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திங்கள் அல்லது செவ்வாய்கிழமை வரை இந்தச் சீரமைப்பு பணிகள் நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அண்டம் மற்றும் சூரிய கதிர்வீச்சு துறை ஆய்வாளரான டாக்டர் இயன் கெட்லி, பாதிப்பை சரி செய்யாவிட்டால் விமானத்தில் உள்ள தரவுகளை சூரிய கதிர்வீச்சு அழிக்கும் அபாயம் உள்ளதாகக் கூறினார்.
இதற்கு முன்பு, 2003ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க்கிற்கு சென்ற விமானம் ஒன்று இத்தகைய பாதிப்புக்கு உள்ளானதையும் அவர் சுட்டிகாட்டினார். விமானங்களில் பாதிப்பை சரிசெய்ய அதிகபட்சமாக 3 மணிநேரம் மட்டுமே ஆகும் என்றாலும், ஆயிரக்கணக்கான விமானங்களில் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அதிக நேரம் பிடிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் லட்சக்கணக்கான விமான பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
















