திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நடந்த தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் கடந்த 24ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், 7ஆம் நாள் உற்சவத்தில் விநாயகர் தேர் திருவிழா விமரிசையாக தொடங்கியது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து மகா ரதத்தில் விநாயகர் எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து 4 மாடவீதிகளில் வலம் வந்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















