மகா தீபத்தன்று திருவண்ணமலை அண்ணாமலையார் கோயில் மலையில் பக்தர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 3ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடப்பாண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்தாண்டும், பெஞ்சல் புயல் காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















