2014ல் 2 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி தற்போது 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், மாவ் நகரில் உள்ள ராணுவ பயிற்சி மையங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2016ஆம் ஆண்டுக்கு பின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால், பாரதத்தில் தயாராகும் ராணுவ தளவாடங்கள் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
புல்லட் பாதுகாப்பு உடைகள், ரோந்து படகுகள், ரேடார், ஹெலிகாப்டர், இலகுரக நீர்மூழ்கி குண்டு போன்ற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும், பிரம்மோஸ் ஏவுகணைகள், டோர்னியர் 228 விமானம், ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு போன்ற பெரிய அளவிலான ஆயுதங்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன எனவும் கூறினார்.
மேற்கு ஆசிய நாடுகளான ஆர்மேனியா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவின் புதிய பெரிய வாடிக்கையாளர்களாக உள்ளன எனவும் குறிப்பிட்டார். மேலும், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உள்ள ராணுவ தளவாட தொழில் வழித்தடங்கள் 9 ஆயிரத்து 145 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
















