தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
தென் மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் விளங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். இதனையடுத்து, உபரிநீர் செல்லும் வழியில் தமிழாக்குறிச்சி பகுதியில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதனை கட்டி முடிக்க ஆயிரத்து 60 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் 872 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தடுப்பணையை திறந்து வைத்தார்.
ஆனால், தமிழாக்குறிச்சி தடுப்பணை கட்டப்பட்டு ஓராண்டுகூட முடிவடையாத நிலையில், அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழாக்குறிச்சி தடுப்பணையானது தாமிரபரணியின் உபரி நீருடன் சேர்த்து, பச்சையாறு, கோரையாறு போன்ற பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தையும் தாங்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த சூழலில் தடுப்பணையின் விரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் அதிகப்படியான வெள்ளம் வெளியேறி, 5 கிராமங்களை மூழ்கடிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் தண்ணீரில் மூழ்கக்கூடும் என்பதால் விவசாயிகளும் கலக்கத்தில் உள்ளனர். மத்திய அரசு 90 சதவீத நிதியை வழங்கியுள்ள போதிலும், பொதுப்பணித்துறையினர் அலட்சியத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபட்டதால்தான் தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விரிசல் மேலும் பெரிதாகி உடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர். மக்களின் உயிருடன் விளையாடும் வகையில் இதுபோன்று தரமற்ற முறையில் கட்டுமானங்களை அமைக்க கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















