சேலத்தில் அனுமதியின்றி கோயில் நுழைவு வளைவை இடித்த திமுக வார்டு செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் சந்தோஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள குமரகிரி கோயில் நுழைவு வாயிலை, திமுக செயலாளரும், பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவருமான சரவணன் இரவோடு இரவாக இடித்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, இடிக்கப்பட்ட வளைவை மீண்டும் கட்டிக் கொடுப்பதாக பலபட்டரை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.
அதே நேரத்தில் திமுக வார்டு செயலாளரின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று அம்மாபேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, புகார் அளித்தனர்.
பின்னர் தங்கள் புகார் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழகம் முழுவதும் இச்சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
















