பாண்டூர் அருகே உள்ள அரசு தொடக்க பள்ளியின் வகுப்பறையில் மழைநீர் ஒழுகியதால் மாணவ, மாணவிகள் வளாகத்தில் அமர்ந்து கல்வி பயிலும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி கட்டடம், சில மாதங்களுக்கு முன்பு “குழந்தைகள் நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு” திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் கடந்த 3 நாட்களாகப் பெய்த காரணமாகப் பள்ளியின் மேற்கூரையில் தேங்கிய மழைநீர் கசிந்து வகுப்பறை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் வகுப்பறையில் அமர்ந்து குழந்தைகள் பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்கள் துணையுடன் பள்ளி ஆசிரியர்கள் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயின்றனர்.
இதனிடையே, பள்ளி கட்டடத்தை முறையாகச் சீரமைக்காததால் வகுப்பறையில் தண்ணீர் ஒழுகுவதாகக் குற்றம்சாட்டிய பொதுமக்கள், உடனடியாகப் பள்ளி கட்டடத்தைச் சீரமைத்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















