பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவப் பதவியில் வரலாறு காணாத குழப்பம் நிலவுவதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திலக் தேவாஷர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த அசிம் முனீரின் பதவிக் காலம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, புதிய தலைமைத் தளபதியை நியமிக்கும் அறிவிப்பு வெளியாகாததால் நாட்டின் உயர்மட்ட ராணுவப் பதவிகள் மற்றும் அணுசக்தி கட்டளை அமைப்பில் வரலாறு காணாத சட்ட மற்றும் அரசியல் குழப்பம் நிலவுகிறது.
இதுகுறித்து பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திலக் தேவாஷர், புதிய அறிவிப்பு வராததால், பாகிஸ்தானுக்குத் தற்போது ராணுவத் தலைமைத் தளபதியே இல்லாத ஒரு நிலை உருவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட மூலோபாயப் படைகளின் கட்டளை அமைப்பின் கீழ்க் கொண்டுவரப்படவிருந்த அணுசக்தி கட்டளை ஆணையத்திற்கும் தலைமை இல்லாததால், இந்த உறுதியற்ற தன்மை பாகிஸ்தானின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கும் சவால் விடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் பிரதமர் வேண்டுமென்றே பஹ்ரைனுக்குச் சென்று அங்கிருந்து லண்டனுக்குப் பயணித்து, இந்த முடிவிலிருந்து விடுபட முயற்சிப்பதாகவும் கூறினார்.
மேலும், ஆசிம் முனீருக்கு ஐந்து ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கும் அறிவிப்பை வெளியிடுவதைத் திட்டமிட்டு அவர் தவிர்ப்பதாகவும் கூறினார்.
















