வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு காலாண்டுக்கு காலாண்டு 242 சதவீதம் அதிகரித்து வருகிறது. 12,000 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ள இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜப்பானின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மிக அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2014-ல் முதல்முறையாகப் பிரதமரான உடனேயே 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பானுக்குச் சென்ற பிரதமர் மோடி முன்னிலையில் புல்லட் ரெயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக இந்தியாவில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியை ஜப்பான் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
தொழில் தொடங்க இந்தியாவைப் போல ஒரு நாடு கிடைக்காது என்றும், இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு எந்தவித தடையும் கிடையாது என்று தெரிவித்த பிரதமர் மோடி, இருநாடுகளுக்கும் இடையேயான நட்பு ஃபெவிக்கால் பிணைப்பைவிட வலிமையானது என்று என நிரூபித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, 400 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க சுமிடோமோ குழுமம், இந்தியாவின் கிருஷ்ணா குழுமத்துடன் இணைந்து முதல் இந்தோ-ஜப்பான் ரியல் எஸ்டேட் கூட்டு முயற்சியை அறிவித்தன. இந்தியா முழுவதும் பெரிய அளவிலான ரியல் எஸ்டேட் திட்டங்களை முதலில் 18 லட்சம் சதுர அடிகளுடனான ‘கிரிசுமி சிட்டி’யுடன் தொடங்கப்பட்டது.
இதுவரை பல பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் முதலீடு செய்துள்ள இந்நிறுவனம் இந்த ஆண்டு, மும்பையில் 6.5 மில்லியன் டாலர் முதலீட்டில் புதிதாக 5 திட்டங்களைத் தொடங்கியுள்ளது.புதிய முதலீட்டிற்காக நவி மும்பை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள நிலத்தையும் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
800க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்களையும் 70,000க்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டுள்ள சுமிடோமோ குழுமம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்ததைத் தொடர்ந்து, ஜப்பானின் பிற முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களான Marubeni Corporation, Mitsubishi Estate and Mitsubishi Corporation, Daibiru Corporation, Tama Home ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடுகள் செய்யத் தொடங்கின. Mitsui Fudosan என்ற நிறுவனம் 225 மில்லியன் டாலர் மதிப்பில் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது.
அதற்காக, கடந்த மாதம், அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மும்பையிலும் டெல்லியிலும் சுற்றியுள்ள பகுதிகளில் இடங்களைத் தேர்வு செய்து வருகின்றனர். மற்ற நாட்டின் ரியல் எஸ்டேட் நிறுவனங்களைப் போல் அல்லாமல், நிலம் மற்றும் கட்டுமானத்தில் உள்ள சொத்துக்களில் முதலீடு செய்யும் ஜப்பான் முதலீட்டாளர்கள் அந்தந்த திட்டத்தில் வடிவமைப்பு தொடங்கி முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜப்பானில் அதிகபட்சம் 4 சதவீதமே லாபம் கிடைக்கும் நிலையில், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் 7 சதவீதம் லாபம் என்பதாலும், இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர் செலவுகளும் மிகக் குறைவு என்பதாலும் இந்தியாவில் ஜப்பான் முதலீடு செய்து வருகிறது. கடந்த மூன்று நிதியாண்டுகளில் சராசரியாக 8 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா வளர்ந்து வருவதால், நாட்டில் பிரீமியம் அலுவலக இடங்களுக்கான வாடகை அதிகரித்துள்ளதாலும் இந்தியாவில் ஜப்பானின் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
அதிலும் ஜப்பானின் நிறுவனங்கள், மிகவும் அகலமான தரைத் தகடுகளையும், தூண்கள் இல்லாத அலுவலகங்களையும் கட்டிவருகின்றன. இந்த எஃகு போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்ட அலுவலகத்தின் வாடகை சாதாரண வாடகையை விடவும் சுமார் 50 சதவீதம் வரை அதிகமாகிறது என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் மொத்த அந்நிய முதலீட்டில் ஜப்பான், ஹாங்காங் மற்றும் அமெரிக்காவின் பங்கு மட்டும் 89 சதவீதமாகும். இதில் 69 சதவீதம் வணிக சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாற உள்ள நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையிலும் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன.
















