காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கும் அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும் அமர அனுமதிக்க வேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி 2022ம் ஆண்டு உத்தரவிட்டார்.
மேலும் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழி திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகம் வாழி திருநாமமும் பாட வேண்டுமென அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்துத் தென்கலை பிரிவினர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அமர்வு, வடகலை பிரிவினரையும் பிரபந்தம் பாட அனுமதித்த, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.
மேலும் கடந்த 1915 மற்றும் 1969 ம் ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோயில் உதவி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,
தேவைப்பட்டால் காவல்துறை உதவியை கோரலாம் என ஆணையிட்டனர்.
















