இந்தியாவின் வலிமை வெளிப்படத் தொடங்கியுள்ளதால் பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்பதாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜகத்குரு சங்கராச்சாரியார், குருதேவ் சங்கர் அபயங்கர் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்ட விழா, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில், ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு கால பாரம்பரியம் மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் எழுதப்பட்ட புத்தகத்தின் மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், இந்தியா எழுச்சி பெறும்போது உலகளாவிய பிரச்னைகள் தீர்க்கப்படும், மோதல்கள் குறையும், அமைதி நிலவும் என்று நம்பப்படுவதாகக் கூறினார்.
இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதுவே காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வலிமை இப்போது சரியாக வெளிப்படத் தொடங்கியுள்ளதால் பிரதமர் மோடியின் பேச்சை உலக தலைவர்கள் கேட்பதாகவும், உலகை கவனிக்க வைத்துள்ளதாகவும் மோகன் பாகவத் பெருமிதம் தெரிவித்தார்.
















