பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் பெண்ணைப் பயன்படுத்தி பலூசிஸ்தான் விடுதலை படையினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
பலூசிஸ்தான் தனிநாடு கோரி வரும் BLF எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தினா் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானின் பதற்றமான பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
இதில் தடைசெய்யப்பட்ட பலூசிஸ்தான் விடுதலைப் படையின் மூன்று போராளிகள் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சகாய் மாவட்டத்தின் நோகுண்டி நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்திற்குள் போராளிகள் நுழைய முயன்றனர்.
அப்போது ஜரீனா ரபீக் எனப்படும் டிராங் மஹூ என்ற பெண் தற்கொலை படையாக மாறித் தன்னை தானே வெடிக்க செய்தார். இதில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தற்கொலை படை தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
















