பாகிஸ்தான் முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. தலைமை தளபதிகள் யாரும் இல்லாமல் பாகிஸ்தான் இப்போது மீள முடியாத அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. அதுபற்றி ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதியான அசிம் முனீருக்கு உச்சப்பட்ச அதிகாரம் வழங்கும் வகையில் நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப் பட்டுள்ளது. இதற்காக 27வது சட்டத் திருத்தம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் முழு நிர்வாகமும், அசிம் முனீரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மிக முக்கியமாக நாட்டின் அணு ஆயுத அமைப்புகளின் முழுப் பொறுப்பும் அசிம் முனீரின் கைக்கு வந்துள்ளது. இது மட்டுமில்லாமல் குடியரசுத் தலைவருக்கு இணையான சட்டப் பாதுகாப்பும் வாழ்நாள் முழுவதும் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் விலக்கும் அசிம் முனீருக்கு வழங்கப்பட்டது. நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீர் என்று சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டாலும் அவரை முறையாக நியமிப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருக்கிறது.
முன்னதாகக் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியுடன் இராணுவத் தலைமை தளபதி பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், நாட்டின் விமானப்படை மற்றும் கடற்படையின் தலைமை தளபதி பதவிகளும் ரத்து செய்யப்பட்ட பின், முப்படைகளுக்கும் தலைமை இல்லாமல் பாகிஸ்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, பிரதமர் ஷெபாஸ் செரீப் நாட்டுக்குத் திரும்பியதும் முப்படைகளின் தலைமைத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பு “சரியான நேரத்தில்” வெளியிடப்படும் என்றும், அதற்கான செயல்முறை தொடங்கியுள்ளதாகவும் பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இராணுவத் தலைவராகவும், முப்படைகளின் தலைவராகவும் அசிம் முனீர் பதவி வகிப்பார் என்ற அறிவிப்பை வெளியிட விரும்பாத பிரதமர் பிரதமர் ஷெபாஸ் செரீப் அதைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே முதலில் பஹ்ரைனுக்கும், அங்கிருந்து லண்டனுக்கும் சென்றுள்ளதாக, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான திலக் தேவாஷர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே நாட்டின் ராணுவச் சட்டத் திருத்தத்தின் மூலம், ராணுவத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக நீடிக்கப் பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அசிம் முனீருக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால், புதிய அறிவிப்பு எதுவும் தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக, ராணுவத் தலைவர் பதவி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு நான்கு நட்சத்திர பதவிகளுக்கான போட்டியில், மற்ற இராணுவத் தளபதிகள் உள்ளனர் என்றும் திலக் தேவாஷர் தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதி, அணுசக்தி கட்டளை அதிகாரத்துக்குரிய தலைவர் எனப் பொறுப்பான ஒருவர் இல்லாமல் ஒரு அணுச் சக்தி நாடு இருப்பது உலகத்துக்கே மிகவும் ஆபத்தானது என்று திலக் தேவாஷர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிவிப்பை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம், பாகிஸ்தான் அரசின் உயர் மட்டங்களில் நடக்கும் தீர்க்கப்படாத சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளின் அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
















