கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு சிபிஐ நடத்திய விசாரணையை ஆய்வு செய்யவுள்ளனர்.
கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி, தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரை பொதுக்கூட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், காயமடைந்தோர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறிப்பாகச் சம்பவ இடத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சிபிஐ-யின் விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்றம் மூலம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவில் கூடுதல் காவல்துறை இயக்குநர் சுமித் சரண், ஜோனல் வி.மிஸ்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் தற்போது கரூர் சென்றுள்ள நிலையில், அவர்கள் இதுவரை இந்த வழக்கில் சிபிஐ நடத்திய விசாரணையை ஆய்வு செய்யவுள்ளனர்.
முன்னதாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்த குழுவினர், அவர்கள் வழங்கிய மனுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
















