சென்னை அருகே 611 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட தனியார் பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லாவில் பல்வேறு ரைடுகள் பழுதாகிநின்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. திறக்கப்பட்ட முதல்நாளிலேயே அடுத்தடுத்து பழுதாகி நிற்கும் ரைடுகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவின் பிரபலமான பொழுதுபோக்கு பூங்காங்களில் ஒன்றான வொண்டர்லா, கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், புவனேஷ்வர் ஆகிய நகரங்களை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே தனது பொழுதுபோக்கு பூங்காவை கடந்த இரண்டாம் தேதி திறந்தது. 64 ஏக்கர் பரப்பளவில் 611 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த பொழுதுபூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டாம் தேதி திறந்து வைத்தார்.
பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே பல ரைடுகள் பாதியிலேயே நின்றதால் ஆர்வத்துடன் வந்த பயணிகள் அனைவரும் மிகுந்த அதிருப்திக்குள்ளாகினர். இந்தியாவிலேயே முதன்முறையாக தலைகீழாக தொங்கி பயணிக்கும் ரோலர் கோஸ்டரான தஞ்சோரா ரோலர் கோஸ்டர், இந்தியாவின் உயரமான ரைடரான ஸ்பின் மில், பூங்காவின் முப்பரிமாண காட்சியை வழங்கும் ஸ்கை ரயில் என உலகத்தரம் வாய்ந்த 43 பிரம்மாண்ட ரைடுகளுடன் உருவாக்கியிருப்பதாக வொண்டர்லாவின் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், முதல்நாளிலேயே பல ரைடுகள் பழுதாகி வொண்டர்லாவின் அரைகுறை வேலைகள் அம்பலமாகியுள்ளன.
உயரத்தில் பறந்து கொண்டிருந்த ரைடுகள் திடீரென செயலிழந்து பாதியில் நின்றதால் அதில் பயணித்த பயணிகளின் வொண்டர்லா நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒரு வாரகாலமாக இந்தியாவிலேயே முதன்முறையாக என விளம்பரம் செய்யப்பட்ட வொண்டர்லா திறக்கப்பட்ட முதல் நாளிலேயே செயலிழந்திருப்பது பொதுமக்களின் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அடிப்படையான இயந்திர பாதுகாப்பு கூட இல்லாமல் அவசரகதியில் திறக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள், பாதுகாப்பு மற்றும் தர சோதனைகள் இல்லாமலேயே திறக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளனர்.
இன்னமும் சில ரைடுகளுக்கான கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது ஏன் என்ற கேள்வியும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்ற தொழில்நுட்ப கோளாறு மின் தடையால் மட்டுமே ஏற்பட்டதாகவும், சிலர் சந்தித்த சிரமங்களுக்காக தங்களின் வருத்தத்தை பதிவு செய்துகொள்வதாகவும் வொண்டர்லாவின் நிறுவனத் தலைவர் அருண் சிட்டிலப்பிள்ளை விளக்கமளித்துள்ளார்.
பொதுமக்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கப் போகிறோம் என திறக்கப்பட்ட வொண்டர்லா அவர்களுக்கு உயிர்பயத்தை கண்முன்னே காட்டியிருக்கிறது. பிரம்மாண்டம் என்பதை தாண்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாவிடில் பொழுதுபோக்கிற்காக தொடங்கப்பட்ட இந்த பூங்கா பொதுமக்களின் உயிரை எடுக்கும் பூங்காவாக மாறிவிடும் என்ற எச்சரிக்கையை வொண்டர்லா உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
















