போர் விமானங்களின் காலம் முடிந்து விட்டது என்று உலகின் பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் தெரிவித்துபோது, சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் நம்பவில்லை. எலான் மஸ்க் கூறியிருப்பதை நிரூபிக்கும் வகையில் ஆளில்லா போர் விமானமான பைரக்டர் கிசிலெல்மாவை அறிமுகப்படுத்தி உலகத்தை வியக்க வைத்துள்ளது துருக்கி. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மனிதர்களை ஏற்றிச் செல்லும் போர் விமானங்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து எலான் மஸ்க் அடிக்கடி விமர்சனம் செய்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த F-35 போர் விமானத்தை விமர்சித்த எலான் மஸ்க், நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடும் வீடியோவை பதிவிட்டு ”சில முட்டாள்கள் இன்னும் போர் விமானங்களை உருவாக்குகிறார்கள்,’ என எழுதியிருந்தார்.
கடந்த ஆண்டு, பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு செலவுகள் குறைப்பது பற்றிய வெள்ளை மாளிகையில் விவாதங்கள் நடந்த நேரத்தில், மீண்டும் எலான் மஸ்க் F-35 போர் விமானங்கள் தேவையற்றது என்று கூறியிருந்தார். அதிக வெப்பமடைதல் காரணமாக F-35 செலவுகள் இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்து சுமார் 485 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்ட மொத்தம் 3,000 க்கும் மேற்பட்ட F-35 விமானங்களில் சுமார் 1,000போர் விமானங்களை அதன் இராணுவம் மற்றும் நட்பு நாடுகளுக்கு வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் முழுவதுமாக 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது போர் விமானத்தின் அடிப்படை இரகசியத்தை செயற்கை நுண்ணறிவு மற்றும் உணர்திறன் கேமராக்கள் மூலம் தோற்கடிக்க முடியும் என்று எலான் மஸ்க் கூறியது இப்போது உண்மையாகி உள்ளது. துருக்கியின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளரான பேக்கர், தமது முதல் ஆளில்லா போர் விமானமான பேரக்டர் கிசிலெல்மாவை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
காட்சிக்கு அப்பாற்பட்ட AIR TO AIR ஏவுகணையை ஏவி, குறிப்பிட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது. இது உலகளவில் சாதனையாகக் கருதப்படுகிறது. (Aselsan’s Murad) அசெல்சனின் முராத் AESA ரேடாரைப் பயன்படுத்தி, (Kızılelma) கிசிலெல்மாவிலிருந்து ஏவப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட (Gökdoğan) கோக்டோகன் ஏவுகணை மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது துருக்கி விமான வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Selçuk Bayraktar,) செல்சுக் பைரக்டர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு நிதியில்லாமல் இருக்கும் நாடுகள் குறைந்த செலவில் தங்கள் விமானப்படைகளை வலுப்படுத்த இந்தத் துருக்கியின் ஆளில்லா போர் விமானம் உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. துருக்கியின் (Kızılelma) கிசிலெல்மா இனி அமெரிக்காவின் F-35, பிரான்ஸின் ரஃபேல் மற்றும் சீனாவின் J-20 போன்ற போர் விமானங்களின் ஆதிக்கத்திற்கு சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய ட்ரோன்கள் விரைவில் ஆளில்லா போர் விமானங்களுக்கு மாற்றாக அமையும் என்பதை பல பாதுகாப்பு ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு உயர் செயல்திறன் கொண்ட போர் ட்ரோன் தயாரிப்புச் செலவுகள் மலிவானதாக இருக்க முடியாது என்று கூறும் பாதுகாப்பு வல்லுனர்கள், ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வது மட்டுமல்ல, அசாதாரண சூழலை உருவாக்கி எதிரியின் மீது செலவுகளைச் சுமத்துவது தான் ஒரு விமானத்தின் குறிக்கோள் என்று கூறியுள்ளனர்.
எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் போர் விமானமான B-1 சோவியத் யூனியனை வான் பாதுகாப்புக்கான செலவினங்களை அதிகரிக்க வைத்து அந்நாட்டையே திவால் நிலைக்குத் தள்ளியது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர். கிசிலெல்மாவின் வெற்றி, ஆளில்லா போர் விமானம் உலகம் எதிர்பார்த்ததை விட வேகமாக நடந்துள்ளது.
சோதனை வெற்றியிலிருந்து போர்க்கள ஆதிக்கத்துக்கான பாதை தெளிவற்றதாகவே உள்ளது. AI, தன்னாட்சி செயல் திறன் மற்றும் மின்னணு போர் மீள்தன்மை ஆகியவற்றில் துருக்கியின் (Kızılelma) கிசிலெல்மா இன்னும் நீண்ட துாரம் பயணிக்க வேண்டிய தேவை உள்ளதாகக் கூறப்படுகிறது.
















