இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் உளவுத்திறனை மேம்படுத்தும் நோக்கில், இஸ்ரேல் தயாரிப்பான அதிநவீன ஹெரான் மார்க் II ஆளில்லா விமானங்களை கூடுதலாக வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
போர்க்களத்தின் ராணி என்று போற்றப்படும் ஹெரான் மார்க் II டிரோன்களின் செயல்திறன், ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இருந்தது.
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நீண்டதூர உளவு, கண்காணிப்பு, இலக்குகளைக் கண்டறிதல் போன்ற முக்கியப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, வெற்றிக்கு இன்றியமையாததாக இந்த மேம்படுத்தப்பட்ட டிரோன்கள் இருந்தன.
இதனைத் அடுத்து, ஏற்கனவே இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்துள்ள ஹெரான் மார்க் II டிரோன்கள், தற்போது கடற்படையிலும் சேர்க்கப்பட உள்ளன.
இந்தக் கொள்முதலின் ஒரு பகுதியாக, ஹெரான் மார்க் II டிரோன்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் எல்காம் போன்ற இந்திய பங்குதாரர்களுடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்ளவும், குறைந்தது 60 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களுடன் இவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
















