தனிநபர்களின் தகவல் திருட்டு முதல் ஒரு நாட்டையே உளவு பார்க்கும் அளவுக்குச் சைபர் குற்றங்கள் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ள உலகத்தோடுதான் நாமும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் டிஜிட்டல் திருட்டை தடுக்க நமது பாரதம் சஞ்சார் சாத்தி செயலியைக் கட்டாயமாக்கி பயனர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்வந்துள்ளது.
டிஜிட்டல் மோசடிகளை தவிர்க்கவும், தகவல் திருட்டை தடுக்கவும் ஒவ்வொரு நாடும் தங்களுக்கென்று டிஜிட்டல் இரும்புத்திரையை நிறுவியுள்ளன. அந்த வகையில் நமது பாரதம், சைபர் மோசடியை எதிர்த்துப் போராடுவதிலும், திருடப்பட்ட செல்போன்களை மீட்பதிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்னிலைப்படுத்தியுள்ளது. இனி தயாரிக்கப்படும் ஸ்மார்ட் போன்களில் கட்டாயம் சஞ்சார் சாத்தி செயலி இருக்க வேண்டும் என்றும், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களில் சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளோ அரசின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், இதனை ஒரு கண்காணிப்பு கருவி என்று விமர்சித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நிராகரித்துள்ளார். சஞ்சார் சாத்தி செயலி மூலம் யாரையும் உளவு பார்க்க முடியாது, அது நடக்கவும் வாய்ப்பில்லை என்று விமர்சனங்களுக்கு முடிவுரை எழுதியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான பாரதம், மக்கள் பாதுகாப்பில் உறுதியாக உள்ளது என்று கூறிய அவர், தேவைப்பட்டால், மக்களின் பரிந்துரைகள், கருத்துக்களின் அடிப்படையில் விதிகளை மேம்படுத்தத் தயாராக இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
வளர்ந்த நாடுகள் சைபர் மோசடிகளை தடுக்க பல்வேறு வழிகளைக் கையாளுகின்றன. ரஷ்யாவில், அனைத்து தொலைபேசிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் போன்றவற்றில் 19 “அத்தியாவசியமான மென்பொருள்களை நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் ஐ.டி.செயலி, கோசுஸ்லுகி (Gosuslugi) மற்றும் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு மாற்றான புதிய MAX Super App உள்ளிட்டவற்றை கட்டாயமாக்கியுள்ளன.
சாத்தியமான சைபர் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க இத்தனை நடவடிக்கைகள் முக்கியமானது என்பது ரஷ்யாவின் கூற்று… சீனாவில், Cyberspace Administration of China, Ministry of Public Security மூலம் மிக விரிவான அரசு கட்டுப்பாட்டு மாதிரி பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் கிரேட் ஃபயர்வால், சந்தேகத்திற்கு இடமான டொமைன்கள், ஃபிஷிங் பக்கங்கள், அங்கீகரிக்கப்படாத நிதி வலைதளங்கள் பயனர்களை சென்றடைவதை கவசம் போன்று தடுத்து நிறுத்தும் வேலையை செய்கின்றன.
அமெரிக்காவும், பிரிட்டனும், நிதிநிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை நம்பியிருக்கும் பல அடுக்கு அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றன. ஃபிஷிங் மற்றும் அடையாளத் திருட்டு போன்ற சைபர் குற்றங்களைப் புகாரளிப்பதற்கான மையமாகச் செயல்படும் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மூலம் இயக்கப்படும் இணைய குற்றப் புகார் மையமான IC3 இந்த அமைப்பை வழிநடத்துகிறது.
மோசடி செய்பவர்களுக்கு ஃபெடரல் டிரேட் கமிஷன் தண்டனை வழங்கி நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கிறது. பிரிட்டனில் உள்ள National Fraud and Cyber Crime Reporting Centre ஃபிஷிங் மின்னஞ்சல்கள், தீங்கிழைக்கும் வலைத்தளங்களை நீக்குகிறது. பிரிட்டனில் உள்ள வங்கி அமைப்பில் அதிநவீன மோசடி கண்டறிதல் அமைப்பு, மோசடிகளை எச்சரித்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கிறது. சிங்கப்பூர் டிஜிட்டல் முறையில் முன்னேறிய நாடு, விருப்பத்தேர்வான ScamShield செயலியைப் பயன்படுத்துகிறது.
AI மற்றும் தரவு பகுப்பாய்வுகளுடன் கூடிய தொழில்நுட்பம், மோசடி அழைப்புகள், செய்திகள் அல்லது இணைப்புகளுக்கு எதிராக பயனர்களை எச்சரிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் ஒவ்வொரு சாதனமும் அனைத்து அத்தியாவசிய பாதுகாப்பு புதுப்பித்தல்களை பெறுவதையும், ஒவ்வொரு தள அடுக்கிலிருந்தும் பாதுகாப்பாக இருப்பதையும் சைபர் மீள்தன்மை சட்டம் உறுதி செய்கிறது.
கூடுதலாக, டிஜிட்டல் சேவைகள் சட்டம் கூகிள், மெட்டா மற்றும் டிக்டோக் போன்ற மிகப் பெரிய தளங்களை கடுமையான அபராதங்கள் விதிப்பதன் மூலம் சாத்தியமான மோசடி அச்சுறுத்தல்களை விரைவாக அகற்றுவதற்கு பொறுப்பேற்க வைக்கிறது. சீனாவின் கிரேட் ஃபயர்வால் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டம் வரை, முக்கிய நாடுகள் சைபர் மோசடியை எதிர்த்து எவ்வாறு போராடுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால், டிஜிட்டல் இரும்புத்திரையானது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்து விடும்.
ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் டிஜிட்டல் மோசடிகளை தடுக்க பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களை வைத்திருப்பது போல் நமது பாரதமும், பொதுமக்களை பாதுகாக்கும் அம்சங்களை முன்னிறுத்தும் வகையில் சஞ்சார் சாத்தி செயலியை நடைமுறைப்படுத்துவது வரவேற்கத்தக்கது.
















