தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 2 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தென்னாடுடைய சிவனே போற்றி என முழங்க ஏராளமான பக்தர்கள் மலையேறி தீப தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஏரிக்கரையில் அமைந்துள்ள கால பைரவர் சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 165 கிராமங்கள் இணைந்து நடத்திய இந்த திருவிழாவையொட்டி, கோயில் சன்னதியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூரிர் சுப்ரமணிய சுவாமி மலை கோயிலில், 12 அடி உயரம் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலையால் செய்யப்பட்ட சொக்கப்பனையும் எரிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா, அரோகரா என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பினர்.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலின் கார்த்திகை தீபம் பச்சரிசி மலை மீது ஏற்றப்பட்டது. தூரல் மழைக்கு மத்தியில் தீபத்தை தரிசித்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்றும் வெற்றிவேல் வீரவேல், அரோகரா என்றும் பக்தி முழக்கமிட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள தலைச்சோலை கிராமத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருநாளையொட்டி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் அண்ணாமலையாரை தரிசித்து தீபம் ஏற்றுவதை கண்டு வழிபட்டு சென்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள காந்தல் காசி விஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 21 அடி உயரமுள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சந்தணக்காப்பு அலங்காரத்தில் ஜொலித்த காசி விஸ்வநாதரை மனமுருகி வழிபட்டனர்.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள், விவசாயிகளும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான விளக்குகளில் நொய்யல் என தீபங்கள் காட்சி அளித்தது காண்போரை கண் கவர செய்தது.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை திரளான பக்தர்கள் கொட்டும் மழையில் குடையுடன் காத்திருந்து கண்டு வழிபட்டனர்.
கார்த்திகை தீப திருநாளில் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி இன்று கோயிலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுவாமி விநாயகர், தாயுமானவர், மட்டுவார் குலழி அம்மன் ஆகியோர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாதாரனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உச்சி பிள்ளையார் கோயில் அருகே உள்ள 50 அடி கோபுரத்தில் வைக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் காசி விஸ்வநாதர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளையொட்டி 80 ஆண்டுகளுக்கு பிறகு அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த சொக்கப்பானை கொளுத்தப்பட்டு ஜோதி வடிவான இறைவனை பக்தர்கள் வழிபட்டனர்.
தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியில் உள்ள திருமலைக் குமாரசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகா தீபமானது ஏற்றப்பட்டது. மேலும், பனை ஓலைகளில் சொக்கப்பானை நிகழ்வும் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சிவகங்கை அருகே திருமலை கிராமத்தில் உள்ள புராண சிறப்புமிக்க பாகம்பிரியாள் அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகையொட்டி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஓம் நமசிவாய, அரோகரா என முழங்கி பக்தர்கள் மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி வள்ளி தெய்வானையுடன் சண்முகநாத எழுந்தருளினார். தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டபோது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
நெல்லை மாவட்டம், பாபநாசத்திலுள்ள பாபநாசநாதர் கோவிலில், திருக் கார்த்திகையையொட்டி சொக்கப்பனை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், கோயிலின் முன்முற்றத்தில் 10 அடி உயரமுள்ள சொக்கப்பனை அமைக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் 4 முனைகளில் இருந்தும் நெருப்பு வைத்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலை உச்சியில், 43-ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 5 அடி செப்பு கொப்பரையில், 2 ஆயிரத்து 100 மீட்டர் திரியிட்டு, 1008 லிட்டர் நெய் ஊற்றி, 108 கிலோ கற்பூரமிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில், மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஸ்ரீ குமாரமலை பாலதண்டாயுதபாணி கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பாலதண்டாயுதபாணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு முருக பெருமானை மனமுருகி வழிபட்டனர்.
கார்த்திகை தீபத்தையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபுரத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. முன்னதாக சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்ட நிலையில், மும்மூர்த்திகளின் உற்சவர்கள் சப்பரத்தில் அமர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் பவனி வந்தனர். தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்ட பக்தர்கள் கோயில் வளாகத்தில் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.
















