திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலைமீது ஏறிச் சாமி தரிசனம் செய்யப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்ததால் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மலைமீது தீபத்தூணில் தீபம் ஏற்றச் சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் பகுதியில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், 144 தடை உத்தரவு காரணமாக மலைமீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் பூஜை பொருள்கள் விற்பனை கடைகள், உணவகங்கள் செயல்படும் நிலையில், பக்தர்கள் பிரசாதத்தை பெற்று கொண்டு உடனடியாகச் செல்லுமாறு ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
















