சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை எதிர்காலத் தலைமுறை அறிய வேண்டும் என்று தெலுங்கு முன்னணி நடிகர் பாலையா தெரிவித்துள்ளார்.
பாலையா நடிப்பில் உருவாகியுள்ள ‘அகண்டா 2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் பாலையா, ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை விஜி சந்திரசேகர் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய பாலையா, தெலங்கானா தனது கர்ம பூமி என்றால், சென்னை தனது ஜென்ம பூமி என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., சிவாஜி உடனான தனது தந்தை என்.டி.ஆரின் நட்புபற்றி நெகிழ்ந்து பேசிய பாலையா, என்.டி.ஆர் தமிழகத்திற்கு அன்பு, பாசம் அனைத்தையும் காட்டியதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அகண்டா 2 திரைப்படம் எடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பேசத் தொடங்கிய அவர், இப்படம் எடுக்கப்பட்ட நோக்கமே, சனாதன தர்மத்தை எதிர்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்றும், சத்தியத்திற்காகவும், அநியாயத்திற்கு எதிரான கதைக்களத்தையும் அகண்டா 2 படம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்பிறகு, ஒய்.ஜி.மகேந்திரன் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் பாலையா தனக்கே உரித்தான ஸ்டைலில் தனது கூலர்ஸை மேடையிலிருந்து தூக்கி வீசிய செயல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
















