ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் முக்கிய விமான நிலையமான ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரவு முதல் விமான சேவையில் ஏற்பட்ட பாதிப்பால் பெரும் குழப்பம் நிலவியது.
மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற நாட்டின் பெரு நகரங்களை இணைக்கும் விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை போன்றவை இந்தத் தாமதத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட இந்த இடையூறு காரணமாகப் பயணிகள் மத்தியில் கடும் குழப்பமும், ஏமாற்றமும் ஏற்பட்டது.
விமானங்களை மறு அட்டவணைப்படுத்துவது குறித்து தெளிவான அறிவிப்புகள் இல்லாததால், நூற்றுக்கணக்கான பயணிகள் முனையத்தில் காத்திருந்தனர்.
குறிப்பாக, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் உட்பட பல பயணிகள், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில், தங்களது பயணம் தடைபட்டதாலும், அடுத்த கட்ட நடவடிக்கையை நிறுவனம் மேற்கொள்ளாததாலும், ஆத்திரமடைந்த பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, விமானப் பணியாளர்களின் பணி நேரம் மற்றும் ஓய்வுநேரம் தொடர்பான விமான பணி நேர வரம்பு விதிமுறைகளின் இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே இண்டிகோ நிறுவனம் கடுமையான ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய விதிமுறைகள், வாராந்திர ஓய்வு காலத்தை 48 மணி நேரமாக அதிகரிப்பது மற்றும் இரவு நேரப் பணிகளில் தரையிறங்க அனுமதிக்கப்பட்ட வரம்பைக் குறைப்பது போன்ற மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
















