புனேவில் சக்கரம் கழன்ற நிலையிலும் நிற்காமல் அதிவேகமாகச் சென்ற காரை ஓட்டிய போதை நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பரபரப்பாகக் காணப்படும் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் பல்வேறு சாலைகள் எப்போதும் வாகனங்கள் வந்தவண்ணம் காணப்படும்.
இந்நிலையில் கார் ஒன்றின் முன்பக்க சக்கரம் ஒன்று கழன்ற நிலையில் சாலையில் சென்றதால் மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனைக் கண்ட போலீசார் விரைவாகச் செயல்பட்டு கழன்ற சக்கரத்துடன் சென்ற காரை பின் தொடர்ந்து சென்று இடைமறித்தனர்.
போலீசார் உரிய நேரத்தில் செயல்பட்டதால், சக்கரம் கழன்ற நிலையில் அதிவேகமாகச் சென்ற காரால் பொதுமக்களுக்கோ அல்லது பிற வாகனங்களுக்கோ ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டது.
தொடர்ந்து காரை ஓட்டிய நபரை போலீசார் சோதனை செய்தபோது அவர், குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















