புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் மணலி எஸ்ஆர்எப் மற்றும் பர்மா நகர் சடையாங்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகள் நீரில் மூழ்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்த கனமழையால் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியது.
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் புழல் ஏரியில் இரண்டாயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மணலி புதுநகர், மணலி எஸ்ஆர்எப், சடையாங்குப்பம், பர்மா நகர், ஆண்டார் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல் சூழ்ந்து இருந்த நிலையில் தற்போது ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது குடியிருப்புகள் மற்றும் சாலைகளை மூழ்கடித்துள்ளது.
சடையாங்குப்பம் தரைப்பாலத்தில் தண்ணீர் வேகமாகச் செல்லும் நிலையில், மக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நீர் திறப்பு அதிகரித்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.
















