திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இதுகுறித்த விசாரணையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தாங்கள் மேல்முறையீடு செய்யத் தயாராகி வந்தாகவும், ஆனால் அதற்குள் உயர்நீதிமன்ற பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்போடு மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, தனி நீதிபதி உரிய விசாரணை நடத்தி தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதாகவும், ஆனால், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை, நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே நீதிபதி உத்தரவு பிறப்பித்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநில அரசு கடமையை செய்யத் தவறியதால், பாதுகாப்புகாக சிஐஎஸ்எப் வீரர்கள் செல்ல உத்தரவிடப்பட்டதாகவும், ஏதோவொரு காரணத்துக்காக மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















