2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின், 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார்.
மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த அவருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அதிபர் புதினை ஆரத்தழுவி வரவேற்றார்.
பின்னர் புதினுக்கு அரசு உயரதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதைத் தொடருந்து, பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் பயணித்தனர். ரஷ்ய அதிபரின் வருகையை ஒட்டி, விமான நிலையம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் வருகை தந்தார். அப்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு தேசிய கொடி அலங்காரத்திற்கிடையே இருவரும் நடந்து சென்றனர். புதினின் வருகையையொட்டி பிரதமரின் இல்லம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தன.
பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகத்தை பரிசாக வழங்கினார். இது தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பகவத் கீதை உலக மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்….
இதனிடையே ரஷ்ய அதிபர் வருகை குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதில் தனது நண்பர் புதினை வரவேற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இருநாடுகளுக்கும் இடையேயான உறவு காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவுடனான நட்புறவால் நமது நாடு அதிக பயனடைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
















