பணி நீக்கம் செய்ததால் நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை அழித்துப் பழிவாங்கிய இரட்டை சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசின் ஒப்பந்ததாரராகச் செயல்பட்ட நிறுவனத்தில் வர்ஜீனியாவை சேர்ந்த முனிப் அக்தர், சோஹைப் அக்தர் சகோதரர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் இருவரும் திடீரெனப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்நிறுவனத்தை பழிவாங்கத் திட்டமிட்டு சதிவலையை பின்னத் தொடங்கினர். அதனைச் செயல்படுத்தும் வகையில் நிறுவனத்தின் தரவுகளை AI உதவியுடன் அழித்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்கள் மற்றும் முக்கியமான புலனாய்வு கோப்புகள் உட்பட சுமார் 96 தரவுகளை நீக்கியதாகக் கூறப்படுகிறது. 450 பேரின் வரிக் கோப்புகள் உள்ளிட்ட தரவுகளைத் திருடியதாகவும் தெரிகிறது.
தங்கள் குற்றங்களைக் கண்டறியாமல் இருக்க சிஸ்டம் பதிவுகளை அழிப்பது எப்படி என AI கருவியிடம் கேட்டதுடன் தங்கள் மடிக்கணினிகளையும் அழித்துள்ளனர்.
இதையடுத்து தரவுகள் நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அமெரிக்க அதிகாரிகள், டிஜிட்டல் தடயங்கள் உள்ளிட்டவற்றை வைத்து இரட்டை சகோதரர்களை கைது செய்தனர்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முனிப் அக்தருக்கு அதிகபட்சமாக 45 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் சோஹைப் அக்தருக்கு அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
















