கோவாவில் நைட் கிளப்பில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவாவின் வடக்கு பகுதியில் உள்ள அர்போரா கிராமத்தில் இரவு நேர கிளப் இயங்கி வந்தது. வார இறுதிநாள் என்பதால் கிளப்பில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இந்நிலையில் திடீரென சமையல் அறையில் இருந்த சிலிண்டர் வெடித்து கிளப் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் மற்றவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தீ விபத்து ஏற்பட்ட கிளப்பை ஆய்வு செய்தார். அப்போது பேட்டியளித்த அவர், இரவு நேர கிளப்பில் தீ பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்பட அனுமதித்த அதிகாரிகள் மற்றும் கிளப் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
















