தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டீஸ்வரம் அரசு மேல்நிலை பள்ளியில் கலையரசன் என்ற மாணவர், 12ம் வகுப்பு பயின்று வந்தார். 11ம் வகுப்பு மாணவர்கள் சிலர் தாக்கியதில், மாணவர் கலையரசன் படுகாயமடைந்தார்.
மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் தஞ்சை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 15 மாணவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே உயிரிழந்த மாணவர் கலையரசனின் ஆன்மா சாந்தியடைய வேண்டி பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். மாணவர்களை நல்வழிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். முன்னதாக பள்ளியில் மோட்ச தீபம் ஏற்ற சென்ற இந்து மக்கள் கட்சியினருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
















